செங்கல்பட்டு அருகே பரபரப்பு; 3 ராக்கெட் லாஞ்சர்களை தொடர்ந்து 3 வெடி பொருட்கள் கண்டெடுப்பு: செயலிழக்க வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பு; போலீசார் தீவிர விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 3 ராக்கெட் லாஞ்சர்களை தொடர்ந்து 3 வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை செயலிழக்க வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடு உள்ளது. இந்த காட்டின் மைய பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு, ஒன்றிய, மாநில போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகள் செய்வது வழக்கம். கடந்த 30 வருடங்களாக இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் இயங்கி வந்தது. இரவு, பகலாக போலீசார் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

அப்படி பயிற்சியில் ஈடுபடும்போது, அருகில் உள்ள அனுமந்தபுரம், தென்மேல்பாக்கம், அஞ்சூர், குன்னவாக்கம், கடம்பூர், கலிவந்தப்பட்டு கிராமங்களில் அதிக சத்தம் கேட்கும். சில நேரங்களில் பயிற்சியின்போது துப்பாக்கியின் குறி தவறி குண்டுகள், அருகில் உள்ள கிராமங்களின் மேற்கூரைகள் மற்றும் விவசாய நிலங்களில் விழுந்து வெடிக்கும். இதில் பொதுமக்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் விழுந்தவற்றை கால்நடைகள் மற்றும் அவற்றை மேய்ப்பவர்கள் மிதித்தாலும் வெடித்து காயமடைகின்றனர். இதனால் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ஒருவித அச்சத்துடனே சென்று வந்தனர். அதே நேரத்தில் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அனுமந்தபுத்தேரி கிராமத்தில் ராக்கெட் லாஞ்சர் விழுந்து வெடித்ததில், வீட்டின் மேற்கூரை இடிந்தது. அங்கு வசித்த மக்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஒருமுறை, 15 கிமீ தூரத்தில் உள்ள மானாம்பதி ஏரியில் விழுந்த ஒரு ராக்கெட் லாஞ்சரை அதிகாரிகள் கைப்பற்றி செயலிழக்க வைத்தனர். மற்றொரு சம்பவத்தில், வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை ஒருவர், இரும்பு கடையில் விற்பதற்காக பைக்கில் எடுத்து சென்றபோது திடீரென வெடித்தது.

இதில் அவருக்கும், அப்பகுதியில் உள்ள ஒரு மாடும் காயமடைந்தது. இதையடுத்து ராக்கெட் லாஞ்சரை எடுத்து சென்றவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, டன் கணக்கில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை கைப்பற்றினர். மேலும் அந்த நபரையும் கைது செய்தனர். அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி சுடும் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், தற்போதும், வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் விவசாய நிலங்களில் கிடப்பதாக ஆடு, மாடு மேய்ப்பவர்கள், மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கூடுதல் ஆணையர் சிங்காரவேலன் தலைமையில் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், 3 ராக்கெட் லாஞ்சர்களை பறிமுதல் செய்தனர். அவற்றை செயலிழக்க வைப்பதற்காக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள், வழக்கம் போல ஆடு, மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டபோது, 3 வெடி பொருட்கள் கிடப்பதை பார்த்தனர். உடனே மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தாம்பரம் மாநகர காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 3 வெடி பொருட்களையும் பாதுகாப்புடன் மீட்டனர். அவற்றை பாதுகாப்பாக மலை பகுதியிலேயே பள்ளம் தோண்டி, அவற்றை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும் செயலிழக்க வைப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள், விளை நிலங்களில் விழும்போது, அவற்றை எதிர்பாராமல் சிலர் மிதித்தால் வெடித்து காயம் ஏற்படுகிறது. இந்த ராக்கெட் லாஞ்சர் சக்தி வாய்ந்தது என்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வெடிக்காத லாஞ்சர் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவற்றை கண்டுபிடித்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் செயலிழக்க செய்ய உள்ளோம். மேலும், துப்பாக்கி சுடும் தளத்தை தடை செய்யப்பட்ட பகுதியை அறிவிக்க இருக்கிறோம். அப்பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் பெயர் பலகை வைக்க உள்ளோம். எனவே பொதுமக்களுக்கு இனிமேல் பதற்றம் அடைய வேண்டாம்’ என்றார்.

சட்டவிரோதமாக பயன்படுத்த வாய்ப்பு: வெடிக்காத இந்த ராக்கெட் லாஞ்சரில் உள்ள அலுமினிய பொருட்கள் மற்றும் காப்பருக்கு விலை அதிகம் என்பதால் அவற்றை சிலர், கண்டெடுத்து காயலான் கடைகளில் விற்று சம்பாதிக்கின்றனர். சிலர், வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து மொத்தமாக விற்கின்றனர். சில நேரங்களில் அவைகள் வெடித்து விடுகிறது. காயலான் கடைகளிலும், ராக்கெட் லாஞ்சரில் உள்ள அலுமினிய பொருட்கள் மற்றும் காப்பரை பிரித்தெடுக்கும்போது சில நேரங்களில் வெடிக்கிறது. அதனால் இந்த ராக்கெட் லாஞ்சரை எந்தெந்த காயலான் கடைகளில் வாங்கப்படுகிறது, காயலான் கடைக்காரர்கள் எங்கெங்கு விற்கிறார்கள் என போலீசார் விசாரிக்க உள்ளனர். மேலும் வெடிக்காத லாஞ்சர்களை சட்டத்துக்கு விரோதமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார், தீவிரம் காட்டி இப்பகுதியில் உள்ள வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை பறிமுதல் செய்வதோடு, இவற்றை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் ேகாருகின்றனர்.

Related Stories: