மதுரை-தூத்துக்குடி புதிய அகலரயில் பாதைக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடக்கம்: விவரங்களை சேகரிக்கும் பணியில் வி.ஏ.ஓ.,க்கள் ஜரூர்

திருமங்கலம்: மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகலரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான விவரங்களை சேகரிக்கும் பணியில் அந்தந்த கிராம வி.ஏ.ஓக்கள் தீவிரமாக உள்ளனர். மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தற்போது திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாட்சி வழியாக அகல ரயில்பாதை செல்கிறது. இது சுற்றுபாதையாக இருப்பதால் காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக புதியதாக ரயில்பாதை அமைக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர். புதிய ரயில்வே பாதை அமைக்கும்பட்சத்தில் தூத்துக்குடியிலிருந்து எளிதாக திருச்செந்தூர் வரை ரயில்பாதை அமைக்க வாய்ப்புகள் அதிகம் என பயணிகள் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் ரயில்வே பாதையே இல்லாத விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியடையும் என கருதப்பட்டது. இதனை தொடர்ந்து தென்னக ரயில்வே மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை எட்டையாபுரம் வழியாக தூத்துக்குடி வரை புதியதாக அகலரயில் பாதை அமைக்க திட்டம் வகுத்தது. இதன்கீழ் நிலங்களை கையகப்படுத்தும்படி மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.

நிலம் கையக்கப்படுத்தும் பணி தொடக்கம்:

இந்த திட்டத்திற்கு தற்போது மதுரை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூரிலிருந்து சூரக்குளம், பெரிய ஆலங்குளம், வளையங்கும், திருமங்கலம் அருகேயுள்ள பெரியகூடக்கோவில், பாரபத்தி உள்ளிட்ட பகுதிகளில் புதிய அகலரயில் பாதை பணிக்கான நிலங்களை அளவீடு செய்தும் அவற்றை முறைப்படி கையகப்படுத்தும் பணிகளிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் மதுரை-தூத்துக்குடி புதிய அகலரயில் பாதை அமைக்க 208.16 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன்படி திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தி, பெரியகூடக்கோவில், நெடுமதுரை, திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளம், தொட்டியபட்டி, வலையபட்டி, பெரிய ஆலங்குளம், சூரக்குளம், நிலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கண்டறிந்து அளவுடும் பணிகளில் விஏஓக்கள், ஆர்ஐக்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரையிலான 135 கி.மீ தூரத்தினை கடக்க தற்போது திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி சென்று தூத்துக்குடியை அடைய வேண்டியுள்ளது. இது அதிக சுற்றுப்பாதையாக இது அமைந்துள்ளது. மேலும் மதுரை-நாகர்கோவில் அகலரயில் பாதையில் இது அமைந்துள்ளதால் ஏராளமான ரயில்கள் வருவதால் தூத்துக்குடி ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தற்போது மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக அமைய உள்ள புதிய அகல ரயில்பாதை மதுரை தூத்துக்குடி பஸ்கள் செல்லும் சாலையில் அமைந்துள்ளதால் விரைவில் தூத்துக்குடியை சென்றடையும் வகையில் உள்ளது. இதனால், இந்த அகலரயில்பாதை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். தூத்துக்குடியில் துறைமுகம் உள்ளதால் ரயில்வே துறையின் மூலமாக நகரம் வளர்ச்சியடையும். மேலும் தூத்துக்குடியிலிருந்து மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புதிய ரயில்களை இயக்கமுடியும். மேலும், தூத்துக்குடி வரை புதியரயில்பாதை அமைந்தால் அங்கிருந்து திருச்செந்தூருக்கும் புதிய ரயில்பாதை அமைக்க வாய்ப்புகள் அதிகம்.

எனவே, இந்த புதிய அகலரயில்பாதை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற வாய்ப்புள்ளது என்றனர். இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘புதிய அகலரயில்பாதைக்கான நிலங்களை கண்டறிந்த அவற்றில் பொதுமக்களிடமிருந்து நில எடுப்பு செய்யவேண்டிய மொத்த பரப்பளவு, புறம்போக்குநிலங்களிலிருந்து நில எடுப்பு செய்யவேண்டிய மொத்தபரப்பு குறித்த விவரங்களை சரிபார்த்து புல எண், பாகுபாடு, நான்குமால் விபரம், கட்டுமானம் மற்றம் மரங்கள் விபரங்கள், பட்டாநிலம் எனில் பட்டாதாரர்கள் விவரங்கள் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்து விஏஓக்கள் மூலமாக விரைவில் அறிக்கையை அனுப்பிவைக்கும் படி வருவாய்த்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே கடந்த சில தினங்களாக வலையங்குளம், கொம்பாடி, கூடக்கோவில், பாரபத்தி உள்ளிட்ட பகுதி விஏஓக்கள் நிலம் எடுப்பு விவரங்கள் கையகப்படுத்தும் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்து பின்பு மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், நிலையூர், வலையங்குளம், பாரபத்தி, கூடக்கோவில், காரியாபட்டி வழியாக புதிய அகலரயில்பாதை தூத்துக்குடிக்கு அமைக்கும் பணிகள் துவங்கும் என தெரிய வந்துள்ளது.

Related Stories: