ரூ. 22,000 கோடியில் திட்டம் விமானப்படை விமானம் தயாரிப்பு; குஜராத் ஆலைக்கு மோடி அடிக்கல்

வதோதரா: குஜராத்தின் வதோதராவில் இந்திய விமானப்படைக்கான சி-295 போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான தனியார் ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வதோதராவில் இந்திய விமானப்படைக்கான சி-295 ரக போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான டாடா ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது: இந்தியா தற்சார்பு அடைவதில், பாதுகாப்பு துறையும், விமான உற்பத்தி துறையும் 2 முக்கிய தூண்களாகும். இதில் விமான உற்பத்தி துறையில் தன்னிறைவு அடைவதற்கான மாபெரும் முயற்சி இது. வரும் 2025ம் ஆண்டில் பாதுகாப்பு துறையில் இந்தியாவின் உற்பத்தி 25 பில்லியன் டாலரை (ரூ.2 லட்சம் கோடி) தாண்டும். இதற்கு உத்தரப் பிரதேசம், தமிழ்நாட்டில் நிறுவப்படும் பாதுகாப்பு வளாகங்கள் உதவி புரியும்.

வதோதராவில் உற்பத்தி செய்யப்படும் விமானப்படை சரக்கு விமானங்கள் நமது ராணுவத்திற்கு பலம் கொடுப்பது மட்டுமின்றி, விமான உற்பத்திக்கான புதிய சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்கும். மேலும், உற்பத்தி துறையில் உலகின் மையமாகவும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார். இந்திய விமானப்படையின் அவ்ரோ-748 ரக விமானங்கள் மிகவும் பழையதாகி விட்டதால், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான ஏர் பஸ்சின் சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்படி, 56 சி-295 ரக விமானங்கள் ரூ.21,935 கோடி செலவில் வாங்கப்படுகின்றன. இவற்றில், 4 ஆண்டுகளுக்குள் ஸ்பெயின் நாட்டில் உள்ள தனது தொழிற்சாலையில் 16 விமானங்களை தயாரித்து, இந்தியாவிடம் ஏர்பஸ் ஒப்படைக்க வேண்டும். மீதியுள்ள 40 விமானங்களை, இந்தியாவில் உள்ள டாடா கன்சார்ட்டியம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து ஒப்படைக்க வேண்டும். இந்த ஒப்பந்தப்படி, குஜராத் மாநிலம் வதோதராவில், சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுவே, தனியாருக்கு சொந்தமான நாட்டின் முதல் ராணுவ விமான தயாரிப்பு நிறுவனமாகும். மேலும், சி-295 விமானம் ஐரோப்பாவிற்கு வெளியே தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை.

Related Stories: