சோமாலியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்; 2 கார் குண்டுவெடிப்பில் 100 பேர் உடல் சிதறி பலி: அதிபர் அதிர்ச்சி தகவல்

மொகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய 2 கார் குண்டுவெடிப்பில் 100 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது கூறி உள்ளார். சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் உணவகங்கள் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 2 கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 100 பேர் பலியானதாக அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது நேற்று உறுதி செய்துள்ளார். குண்டுவெடிப்பால் சாலையில் சென்ற வாகனங்கள் வெடித்து சிதறி, பொதுமக்கள் உடல் சிதறி பலியானதாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பை அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு நடத்தி இருப்பதாக சோமாலியா அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இதற்கு முன், கடந்த 2017ம் ஆண்டில் இதே நகரில் நடத்தப்பட்ட டிரக் வெடிகுண்டு தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது போல், இந்த முறையும் அதிகப்படியான மக்கள் பலியானதால் அல்-ஷபாப் அமைப்பு குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்கவில்லை. உள்நாட்டு போராளிக் குழுக்களின் உதவியுடன் அரசுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகள் சண்டையிட்டு வரும் நிலையில், தீவிரவாத சக்திகளை ஒடுக்க விரிவான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அதிபர் ஷேக் முகமது தலைமையில் இரு தினங்களுக்கு முன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளே 2 கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: