தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி பசும்பொன் வருகை: தென்மண்டல ஐ.ஜி ஆலோசனை

சாயல்குடி: முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு வரும் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது ஆண்டு ஜெயந்தி விழா, 60வது ஆண்டு குருபூஜை விழா, நாளை (அக். 28) கும்பாபிஷேக விழா மற்றும் ஆன்மிக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்குகிறது. 29ம் தேதி 2ம் நாள் வழக்கமான பூஜைகள், அரசியல் விழா நடக்கும்.

30ம் தேதி 3ம் நாள் குருபூஜை, அரசு விழா கொண்டாடப்படுகிறது. 3 நாட்களும் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி, வேல் மற்றும் ஜோதியை எடுத்து தேவர் நினைவிடத்தில் செலுத்தியும், வணங்கியும் செல்வர். அக். 30ம் தேதி தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி ஆயுதப்படை கூட்டரங்கில் ஆலோனை கூட்டம் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நேற்று நடந்தது.

5 டிஐஜிக்கள், 28 எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஐ.ஜி அஸ்ரா கார்க் கூறும்போது, ‘‘தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழாவில் 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 13 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, உயர் கோபுரத்திலிருந்து கண்காணிக்கப்படும்.  இதுபோன்று 13 ட்ரோன்கள் மூலமும் கண்காணிக்கப்படும். தேவையான இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.

அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வாகனங்களின் மேற்கூரைகளில் ஏறுவது, இடையூறு செய்வது, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: