அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் 12 பேரை தேர்வு செய்ய விரைவில் தேர்தல்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் 12 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை விரைவில் நடத்தி மொத்தம் உள்ள 24 உறுப்பினர்கள் பட்டியலை இன்னும் ஒரு மாதத்துக்குள் வெளியிட அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இப்பதவிகளுக்கு புதிய நபர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி, புதிய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைளை விரைவில் எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மொத்தம் உள்ள 24 பேரில் 12 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 12 பேரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தனது அதிகாரத்தின் மூலம் நியமிக்கலாம்.

 இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில்,‘‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை ஒரு மாதத்துக்குள் நியமிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. எனவே அதற்கான நடவடிக்கைகளை வேகமாக தொடங்க உள்ளது. தேர்தல் மூலம் தேர்வு செய்யக்கூடிய 12 பேரை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள்(ஏஐசிசி) வாக்களித்து தேர்வு செய்வார்கள். எனவே, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களின் புதிய பட்டியலை கட்சி தலைமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Related Stories: