ஊட்டி தாவரவியல் பூங்கா முழுவதிலும் பூத்து குலுங்கும் சால்வியா மலர்கள்-சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. நீலகிரி  மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகளவு உள்ளதால் நாள் தோறும் வெளிநாடுகள்,  வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா  பயணிகள் வந்துச் செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலா  பயணிகள் வருகின்றனர். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வெளி  மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படும். அதேபோல்  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை விடுமுறைகள் தொடர்ந்து  வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம்.

இரண்டாம்  சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தவில்லை என்றாலும், அதற்கு இணையாக மலர்  அலங்காரங்கள் மேற்க்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி பூங்கா முழுவதிலும்  புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், பூக்கள் பூத்து குலுங்கும்.  இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள்  அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும்  வகையில் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

 பூங்கா முழுவதிலும் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. எனினும்,  பூங்கா முழுவதிலும் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிறத்தில் சால்வியா  மலர்கள் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, பூங்கா நுழைவு வாயில் பகுதியில்  இருந்து கண்ணாடி மாளிகை செல்லும் வழித்தடத்தில் இரு புறங்களிலும் பூத்துள்ள  சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.  இதன் அருகே நின்றி சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: