தமிழகத்தில் களை கட்டியது தீபாவளி பண்டிகை: ஜவுளி, பட்டாசு கடைகளில் விற்பனை படுஜோர்.! சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதல் கடைகளில் துணிகள், பட்டாசுகள், ஸ்வீட் விற்பனை களை கட்டியது. பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மட்டும் பஸ், ரயில்களில் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புத்தாடை விற்பனை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று தமிழகம் முழுவதும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாலை 4 மணிக்கு மேல் கடை வீதிகளில் எங்கும் திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. இரவு 10 மணி வரை இந்த கூட்டம் காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், போரூர் சரவணா ஸ்டோர்ஸ் எதிரே உள்ள மைதானம், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கடைகளில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த ஆண்டை விட பட்டாசுகள் 20 சதவீதம் அளவுக்கு அதிகமாக விற்பனையானது. விலையை பொருட்படுத்தாமல் மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர். இரவில் கூட்டம் மேலும் அதிகரித்தது.

அதே போல ஸ்வீட் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆர்டர் கொடுத்தவர்கள் உடனடியாக ஆர்டர் செய்த ெபாருளை வாங்கி சென்றனர். ஆர்டர் செய்யாதவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வீட்டை வாங்கி சென்றனர். சென்னை மாநகரில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதலே ரயில்கள், பஸ்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இறுதி நாளான இன்று காலை முதல் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து ரயில், பஸ்கள் மற்றும் கார்கள் மூலம் சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள சாலைகள் அனைத்தும் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால், எந்தவித இடைஞ்சலும் இன்றி சாலைகளில் பயணம் செய்ய முடிந்தது. தீபாவளி பண்டிகை அன்று நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பது வழக்கம். அதனால், இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகையன்று குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதனால், நாளை பெரும்பாலான பிரபல கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள ஜவுளி கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள், பட்டாசு கடைகள் மற்றும் நகை கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.

Related Stories: