கொடைக்கானலில் ஏரி அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏரி பகுதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றும் வீசி வருகிறது. நேற்று மழை இல்லாமல் இருந்த நிலையில் லோயர் சோலை ரோடு பகுதியில் ஏரிக்கு அருகில் திடீரென்று ராட்சத மரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது.

இதனால் அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து தடைப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாற்று சாலையை பயன்படுத்தி சென்றனர். மரம் முறிந்து மின்சார கேபிள் மீது விழுந்ததில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கேபிள் வழியாக மின்சார பாதை அமைத்து உள்ளதால் இதை பழுது நீக்கி மீண்டும் மின் இணைப்பு கொடுக்க பல மணிநேரம் ஆகும் என மின்சார வாரியத்தினர் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: