இங்கி. புதிய பிரதமராக ரிஷிக்கு அதிக வாய்ப்பு: கடும் போட்டி தருகிறார் போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் முன்னிலையில் உள்ளார். இதனால், புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்தில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து நடந்த கட்சி தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாளியினருமான ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் போட்டியிட்டனர். இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று, கட்சி தலைவராகவும் இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்றார். ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, அமைச்சர் ராஜினாமா, வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் கடந்த வியாழக்கிழமை லிஸ் டிரஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சில நாட்களில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லிஸ் டிரஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கே புதிய பிரதமராகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிரதமர் வேட்பாளராக போட்டியிட குறைந்தது 100 எம்பிக்கள் ஆதரவு தேவை. இது, ரிஷிக்கு கிடைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோரும் ரேசில் உள்ளனர். சமீபத்தில் எடுத்த கருத்து கணிப்பின்படி புதிய பிரதமர் யார் என்ற கேள்விக்கு ​​44% பேர் சுனக்குக்கு ஆதரவு தெரிவித்தனர். 31% பேர் ஜான்சனுக்கு ஆதரவு அளித்தனர்.

Related Stories: