பிறந்த நாள் விழாவின்போது பா.ஜ, பிரமுகரிடம் தலா 2 பவுன் வாங்கிய 200 பேரிடம் விசாரணை: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு

சேலம்: தமிழகத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த பாஜ பிரமுகர், தனது பிறந்த நாளில் 200 பேருக்கு தலா 2 பவுன் நகையை பரிசாக கொடுத்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் தாதகாப்பட்டி குமரன்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51) பாஜ பிரமுகர். இவர், ஜஸ்ட்வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தினார். சேலம், வேலூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், திருச்சி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் பணம் டெபாசிட் பெற்றுள்ளார். இதன்மூலம் மட்டும் ரூ.400 கோடி ரூபாயை வசூலித்துள்ளார்.

டெபாசிட் பெற்றவர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்ற அனுமதியுடன் அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில், அவரது பிறந்த நாளின்போது மட்டும் 200 ஏஜெண்டுகளுக்கு தலா 2 பவுன் நகையை பரிசாக வழங்கியுள்ளார். அவர்களை அழைத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் வாங்கிய நகையை கொடுக்காவிட்டால் அவர்கள் மீதும் வழக்கு பாயும் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.

Related Stories: