கேரள நரபலியில் அதிர்ச்சி தகவல்: பத்மாவை கொடூரமாக கொன்ற பிறகு 3 பேரும் காளி பூஜை நடத்தியது அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மாவை கொடூரமாக கொலை செய்த பிறகு அவரது உடல் அருகே முகமது ஷாபி உள்பட 3 பேரும் சேர்ந்து காளி பூஜை நடத்தியது விசாரணையில் தெரியவந்து உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அவர்கள் பத்மா, ரோஸ்லி ஆகிய 2 பேரையும் எப்படி நரபலி கொடுத்தார்கள்? என்பது குறித்த விவரங்கள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.

இது தவிர வழக்கு தொடர்பான விசாரணைக்காக கைதான 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பத்மா மற்றும் ரோஸ்லியை நரபலி கொடுத்த பிறகு அவர்களது செல்போன், பேக் உள்பட பொருட்களை வழியில் வீசிவிட்டதாக ஷாபி போலீசிடம் கூறியிருந்தார். பத்மாவின் ஒரு கொலுசை வழியில் ஒரு வாய்க்காலில் வீசியதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து அவற்றை கண்டுபிடிக்க ஷாபியை அந்த இடங்களுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதில் ரோஸ்லியின் பேக் மற்றும் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பத்மாவின் செல்போனும், கொலுசும் இதுவரை கிடைக்கவில்லை.

இதற்கிடையே பத்மாவை கொடூரமாக கொலை செய்த பின்னர் அவரது உடலுக்கு அருகே 3 பேரும் அமர்ந்து காளி பூஜை நடத்தியது தெரியவந்து உள்ளது. உடலின் தலைப்பகுதியில் காளியின் போட்டோ விளக்கு மற்றும் பொருட்களை வைத்து இந்த பூஜையை நடத்தி உள்ளனர். நரபலி கொடுத்த பிறகு அந்த உடலை வைத்து காளி பூஜை நடத்தினால் பெரும் செல்வம் கிடைக்கும் என்று பகவல் சிங்கையும், லைலாவையும் ஷாபி நம்ப வைத்து உள்ளார். இதற்கிடையே கூடுதல் பரிசோதனைக்காக பத்மாவின் மகன், அவரது தங்கை, ரோஸ்லியின் மகள் ஆகியோரின் ரத்த மாதிரியை நேற்று போலீசார் சேகரித்தனர்.

பத்மா மற்றும் ரோஸ்லியின் உடல்கள் தற்போதும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதக் கிடங்கில் தான் உள்ளது. உடல் பாகங்களை ஒன்றாக சேர்த்து வைத்து பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்து உள்ளனர். இதில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Related Stories: