கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி!: பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள்..உணவு இன்றி மெலிந்து போன கால்நடைகள்..!!

கென்யா: கென்யாவின் தொன்மை குடிகளில் ஒன்றான மாசாயின மக்களின் முக்கிய வாழ்வாதாரமே கால்நடை வளர்ப்பு தான். ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வளர்த்து அதன் மூலம் வரும் வருமானம் மூலமே அவர்களின் வருமானமாக உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 4 பருவங்களாக மழை பொய்த்து போனதால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியை கென்யா எதிர்கொண்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பசி, பட்டினியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மனிதர்களுக்கே அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கால்நடைகளை வளர்ப்பதில் மாசாயின மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அங்குள்ள மாடுகள் அனைத்தும் போதிய தீவனமின்றி உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன. அவற்றை வைத்து வழக்கமாக வரும் வருமானமும் நின்றுவிட்டதால் மெலிந்துபோன கால்நடைகளை கூட விற்கும் பரிதாப நிலைக்கு அந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விற்பனைக்கு கொண்டுவரப்படும் மாடுகள் நிற்கக்கூட முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன.

உணவு பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், குறைந்த விலைக்கு மாடுகளை விற்று அதில் வரும் பணத்தில் வாழும் நிலையில், மாசாயின மக்கள் உள்ளனர். சில கன்றுக்குட்டிகள் உரிய உணவு இன்றி உயிரிழந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த 5 மாதங்களாக நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும் தங்களுக்கான உணவே கிடைக்காத போது, கால்நடைகளை காப்பாற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: