திருப்புத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி மணிமுத்தாறு ஆற்றுப்பாதையில் பாலம் கட்ட வேண்டும்-கிராமத்தினர் கோரிக்கை

திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஒன்றியம் வாணியங்காடு ஊராட்சிக்குட்பட்ட ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தின் வழியாக செல்லும் மணிமுத்தாறு ஆற்றுப்பாதையில் ஓடுபாலம் கட்ட வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்புத்தூரிலிருந்து கண்டரமாணிக்கம் செல்லும் ரோட்டில் விலகில் இருந்து 2 கி.மீ தூரம் உள்ளே சென்றால் ஆத்தங்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் பின்புறம் மணிமுத்தாறு செல்கிறது. இக்கிராமத்தில் நிலத்தடிநீர் உப்பாக இருப்பதால் மேல்நிலைத் தொட்டி நீரை குளிக்க, பாத்திரம் கழுவ மட்டுமே பயன்படுத்துகின்றனர். குடிநீர் எடுக்க சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து இக்கிராமத்தின் பின்புறம் உள்ள கிளாமடம் கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுக்கின்றனர். ஆனால் நடக்கக் கூட முடியாத நிலையில் ஆற்றுப்பகுதி குறுக்கிடுகிறது.

அந்த பாதையில் பாறைகளும், கற்களும், கருவேல மரங்களும் மேடு பள்ளமாக உள்ளதால் சிரமப்பட்டே நடந்து செல்கின்றனர். மேலும் இக்கிராமத்தில் உள்ள பலரும் ஆற்றின் அக்கரையில் உள்ள கிராமங்களுக்கு சென்று கூலி வேலை பார்த்து வருகின்றனர். மேலும் ஆற்றின் மறுகரைலிருந்து காரைக்குடிக்கு செல்ல சுமார் 15 கி.மீ. தூரமே ஆகிறது. இதனால் இக்கிராமத்தில் நீண்ட காலமாக ஆற்றில் ஓடு பாலம் அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர். ஆனால் இக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படததால் இக்கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்காமல் உள்ளது.

சுமார் 2 கி.மீ. நடந்து சென்று திருப்புத்தூர் கண்டரமாணிக்கம் செல்லும் ரோட்டில் நின்று பஸ் ஏற வேண்டியுள்ளது. அதுவும் எப்போதாவது தான் பஸ் வரும்.

திருப்புத்தூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் உள்ளது. மேலும் ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து 100 நாள் வேலைப்பார்ப்பதற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தினமும் ஆற்றுப்பாதையில் வழியாக கிளாமடம் வழியாக 3 கி.மீ தூரம் நடந்து வழியாக பில்லத்தியேந்தல் கிராமத்திற்கு சென்று வருகின்றனர். எனவே இந்த கிராமத்தின் அருகே உள்ள மணிமுத்தாறு செல்லும் பாதையில் ஓடு பாலம் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ப.ஆறுமுகம் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தின் அருகே செல்லும் மணிமுத்தாறு ஆற்றில் ஓடுபாலம் அமைக்க பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். அதிகாரிகளிடம் இது தொடர்பாக கோரிக்கை மனுக்களும் கொடுத்துள்ளோம். இந்த ஆற்றில் இரண்டு இடங்களில் ஓடு பாலம் அமைக்க வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தி ஓடு பாலம் கட்டினால் பஸ்கள் இப்பகுதி வழியாக செல்ல வாய்ப்புண்டாகும்.

பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவர்கள் 3 கி.மீ. தூரம் தினந்தோறும் நடந்து செல்லுகின்றனர். இந்த வழித்தடத்தில் பஸ் வந்து சென்றால் ஆத்தங்கரைப்பட்டி, கிளாமடம், அதிகரம், கே.வலையபட்டி, குடிக்காத்தான்பட்டி, தென்கரை உள்ளிட்ட பல கிராமத்தினர் பஸ் வசதி பெறுவார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுப்பாதையில் ஓடு பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.   

ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த நாச்சம்மை கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமத்திற்கு நூறு நாள் வேலை மற்றும் தண்ணீர் எடுக்க ஆற்றுப்பாதையின் வழியாக தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது ஒத்தையடி பாதையாக உள்ளதாலும், பாதையில் இருபுறங்களிலும் கற்கள் மற்றும் கருவேல மரங்கள் மண்டி உள்ளதாலும், மேடு பள்ளமாக உள்ளதாலும் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. ஆற்றுப்பாதையில் ஓடு பாலம் அமைத்து தந்தால், நடந்து செல்லாமல் சைக்கிள்கள் மற்றும் டூவிலர்களில் ஆண்கள் அழைத்துச்சென்று விடுவதற்கு ஏதுவாக இருக்கும்’’ என்றார்.

Related Stories: