ஆயிரம் விளக்கு தொகுதி கிரீம்ஸ் சாலை பகுதி மக்களுக்கு அதே இடத்தில் குடியிருப்புகளா? எழிலன் கேள்விக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்

சென்னை: பேரவையில், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதி மக்களுக்கு அதே இடத்தில் குடியிருப்புகள் கட்டப்படுமா என்ற திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன் (திமுக) பேசுகையில், ‘‘ஆயிரம் விளக்கு தொகுதி எண்.29, கிரீம்ஸ் சாலை பகுதி மக்களுக்கு அதே இடத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்  மூலமாக குடியிருப்புகள் கட்ட வேண்டும். சுதந்திரா நகர் விரிவு குடிசைப் பகுதி மற்றும்  கார்பரேசன் குடியிருப்பு குடிசைப் பகுதி மக்களுக்கு அதே இடத்தில் தமிழ்நாடு  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக குடியிருப்புகள் வழங்க வேண்டும். ஆயிரம்விளக்கு தொகுதி, புஷ்பா நகர் திட்டப்பகுதி மறுகட்டுமானம் செய்யப்படுமா?” என்றார்.

இதற்கு பதில் அளித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: ஆயிரம்விளக்கு தொகுதி, எண்.29 கிரீம்ஸ் சாலை பகுதியில், 0.95 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி பொது வகைப்பாடு கொண்ட நிலத்தில் சுமார் 250 குடிசை வீடுகள் தனித் தனியாக அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலத்தில் ‘‘அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அந்நிலத்தினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு நில உரிமை மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முதற்கட்டமாக முன் நுழைவு அனுமதி கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கிரீம்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள நிலத்திற்கு முன் நுழைவு அனுமதி கிடைத்த உடன் விதிமுறைகளை பின்பற்றி, நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, குடியிருப்புகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சுதந்திரா நகர் விரிவு பகுதியில், அரசுக்கு சொந்தமான காவல் துறை பயன்பாட்டில் உள்ள நிலத்தில் சுமார் 200 குடிசை வீடுகள் தனித் தனியாக அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கார்ப்பரேசன் குடியிருப்பு குடிசைப் பகுதியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் பயன்பாட்டில் உள்ள நிலத்தில் சுமார் 120 குடிசை வீடுகள் தனித் தனியாக அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இரு குடிசைப் பகுதிகளுக்கும் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் முதற்கட்டமாக முன் நுழைவு அனுமதி கேட்டு கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே முன் நுழைவு அனுமதி கிடைத்த உடன் விதிமுறைகளை பின்பற்றி, நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, குடியிருப்புகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புஷ்பா நகர் திட்டப்பகுதியானது 1976ம் ஆண்டு 30 தொகுப்புகளுடன் 1024 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இக்குடியிருப்புகள் நீண்டநாள் பயன்பாட்டினாலும், தட்ப வெப்ப மாறுபாட்டாலும் சிதிலமடைந்த, இக்குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய வல்லுநர் குழுவும் பரிந்துரை செய்துள்ளது. வரும் நிதி ஆண்டில் முதல்வரின் ஒப்புதல் பெற்று இத்திட்டப்பகுதி மறு கட்டுமானம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: