திருவான்மியூரில் போலீஸ் எனக்கூறி கட்டுமான நிறுவன அதிபரிடம் ரூ.2.5 லட்சம் பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

துரைப்பாக்கம்: திருவான்மியூரில் போலீஸ் என மிரட்டி கட்டுமான நிறுவன அதிபரிடம் ரூ.2.5 லட்சம் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரி சோனியா நகர் பகுதியை சேர்ந்தவர்  இளஞ்செழியன் (50), தனியார் கட்டுமான நிறுவன அதிபர். இவர், கடந்த 15 வருடங்களாக  வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நிறுவனம் சார்பில் துரைப்பாக்கம் சவுத்திரி நகரில் கட்டிடம் கட்டும் வேலை நடந்து வருகிறது. கட்டிடத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று முன்தினம் இளஞ்செழியன் தனது வீட்டிலிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, வேளச்சேரியில் இருந்து திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு சென்னை மாநகர பேருந்தில் வந்தார்.

பேருந்தில் இருந்து இறங்கி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் தங்களை போலீஸ் என இளஞ்செழியனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர், உங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே அழைத்து சென்றுள்ளனர். நீங்கள் பேருந்து நிலையத்திலிருந்த இளம்பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்தீர்கள். உங்களை போட்டோ எடுத்து வைத்துள்ளோம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். பின்னர், இளஞ்செழியனின் கைப்பையை வாங்கி அதிலிருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அருகில் காவல் உதவி ஆணையர் உள்ளார்.

அவரிடம் காண்பித்துவிட்டு வருகிறோம் எனக்கூறி சென்றவர்கள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. அப்போது, தான் தன்னை ஏமாற்றியவர்கள் போலி போலீஸ்காரர்கள் என இளஞ்செழியனுக்கு தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் இளஞ்செழியன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். 2 தனிப்படை அமைத்து பணம் பறித்த ஆசாமிகளை தேடுகின்றனர்.

Related Stories: