மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.! பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

மதுரை: மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் அருகே தென்கரை வைகைக் கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அணையை சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

நேற்று இரவு 7 மணி அளவில் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டு, அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்வதால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் இறங்க, குளிக்க, புகைப்படங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: