காவிரி, கொள்ளிடத்தில் 4வது முறையாக வெள்ளப்பெருக்கு; திருச்சி அருகே 250 ஏக்கர் வாழை, சம்பா நாற்று மூழ்கின: கல்லணை தரைப்பாலம் மூழ்கும் அபாயம்

திருவெறும்பூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 2 நாட்களாக உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன்படி மேட்டூரில் இருந்து காவிரியில் 1.91 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கரூர் மாயனூர் வழியாக முக்கொம்புக்கு வருகிறது.

இதையடுத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் இன்று காலை 1,27,301 கன அடி நீர் செல்கிறது. காவிரியில் 62,245 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரியில் 7,003 கன அடி, வெண்ணாற்றில் 7,004 கன அடி, கல்லணை கால்வாயில் 2,513 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் அதிளவில் தண்ணீர் வருவதால் ரங்கம் நாட்டு வாய்க்கால் இடையே வயல்களில் வாழை மற்றும் சம்பா ஒரு போகத்துக்காக விடப்பட்டுள்ள நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

அதேபோல் கொள்ளிடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கவுதாசநல்லூர், கிளிக்கூடு பகுதியில் உள்ள 200 ஏக்கரில் வாழை பயிர்கள் மூழ்கியது. மேலும் திருவானைக்காவலில் இருந்து கல்லணை செல்லும் வழியில் உத்தமர்சீலி- கவுத்தரசநல்லூர் இடையே காவிரியில் வெள்ள காலங்களில் அதிக தண்ணீர் வந்தால் கல்லணையை பாதிக்காத வண்ணம் ஆங்கிலேயர் காலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பள்ளமாக சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் காவிரியிலிருந்து இருந்து தண்ணீர் வெளியேறி சாலையை கடந்து கொள்ளிடத்துக்கு வழிந்து செல்கிறது. இதனால் திருவானைக்காவல்- கல்லணை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு காவிரி, கொள்ளிடத்தில் 4வது முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: