போருக்கு எப்போதும் தயார் தைவானை விடமாட்டோம்: அதிபர் ஜின்பிங் பரபரப்பு

பீஜிங்: ‘ஹாங்காங் இப்போது சீனாவின் முழுமையான கட்டுபாட்டிற்குள் வந்துவிட்டது.  தைவான் மீது ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் உரிமையைச் சீனா ஒருபோதும் கைவிடாது,’ என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஜின்பிங் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சீன நாட்டை ஆட்சி செய்து வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அதன்படி, இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 2,300 பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து, 2 மணி நேரம் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது: ஹாங்காங் இப்போது முழுமையாக சீனாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

அங்கு இருந்த குழப்பமான நிர்வாகம் இப்போது சீர் செய்யப்பட்டு உள்ளது. தைவான் பிரிவினைவாதத்துக்கு எதிராகப் பெரிய போராட்டத்தை நடத்தி உள்ளோம். பிராந்திய ஒருமைப்பாட்டை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ராணுவத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறோம். இப்போது நமக்கு சர்வதேச தரத்திற்கு இணையான ஒரு ராணுவம் இருக்கிறது. அது, எப்போதும் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். எனது ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆட்சியில் மறைந்திருந்த ஆபத்துக்களை அகற்றியுள்ளது. தைவான் பிரச்னைக்கு தீர்வு காண்பது சீன மக்களின் பொறுப்பு. தைவான் மீது ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் உரிமையைச் சீனா ஒருபோதும் கைவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: