வேன், லாரி, பேருந்து மோதல்; 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி: கர்நாடகாவில் சோகம்

பெங்களூரு: கர்நாடகாவில் வேன், பால் லாரி, பேருந்து ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அர்சிகெரே அடுத்த காந்திநகர் வழியாக 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அதிவேகமாக சென்றது. அந்த வேன், எதிரே வந்த கேஎம்எஃப் பால் டேங்கர் லாரி மீது மோதியது. அதன்பின் பால் டேங்கர் லாரியை பின் தொடர்ந்து வந்த அரசு பேருந்து, அந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் 6 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக அதிகாரிகள் கூறினர். காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சுப்ரமணியர், ஹாசனாம்பா கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வேனில் சென்ற 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். வேனை ஓட்டிவந்த டிரைவர், அதனை அதிவேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: