கோத்தகிரியில் இருந்து கோவை மருத்துவமனைக்கு 68 நிமிடத்தில் ஆம்புலன்சை ஓட்டி சிசுவின் உயிரை காப்பாற்றிய டிரைவர்: முன்னும் பின்னும் அணி வகுத்த ஆம்புலன்ஸ்கள்

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சுவாச கோளாறு காரணமாக, திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேல்சிகிச்சை அளிப்பதற்காக குழந்தையை உடனடியாக கோவைக்கு கொண்டு செல்ல வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பெற்றோர்  விவரம் தெரிவித்ததும், உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர். டிரைவர் ஹக்கீம் (33), பெற்றோருடன் செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் உதவியுடன் குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு கோவை புறப்பட்டார். டிரைவர் ஹக்கீம் உடனடியாக வாட்ஸ் அப் குரூப்பில் குழந்தையை கோவை கொண்டு செல்வது குறித்தும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பயணம் மேற்கொள்ள உதவி செய்யும் படியும் கேட்டுக்கொண்டார்.

அதன்படி, ஆம்புலன்ஸ் மேட்டுப்பாளையம் வந்ததும், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அந்த ஆம்புலன்சுக்கு முன்னும், பின்னும் தலா 3 ஆம்புலன்ஸ்களில் சைரன் ஒலி எழுப்பியவாறு கோவை வரை பாதுகாப்புடன் சென்றனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால், ஆம்புலன்ஸ் டிரைவர் ஹக்கீம் 68 நிமிடத்தில் குழந்தையை கோவை கொண்டுவந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.  தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து குழந்தை அபாய கட்டத்தை தாண்டியது. பெற்றோரும் பொதுமக்களும் டிரைவர் ஹக்கீமை வெகுவாக பாராட்டினர்.

Related Stories: