டெல்டா மாவட்ட அரசு ஆபீஸ்களில் ரெய்டு; ரூ78.51 லட்சம் அதிரடி பறிமுதல்: 23 பேர் மீது வழக்கு

திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக முதல் தளத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், ரூ1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூர் தாலுகா அலுவலகம் எதிரே இயங்கி வரும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் தனிஅறை ஒன்றில் கணக்கில் வராத ரூ75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கோட்ட பொறியாளர் உள்பட 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி குடிசை மாற்று வாரியத்தில் நடந்த சோதனையில் ரூ58ஆயிரம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சோதனையில், ரூ.84 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் துணை மாநில வணிகவரி அலுவலர் சந்தானம்(57), உதவியாளர் இளங்கோ(55), இளநிலை உதவியாளர் ரங்கநாதன்(37) ஆகியோரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.60 ஆயிரம் சிக்கியது. டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  நடத்திய சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூ.78.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: