போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண பல்லடத்தில் புறவழிசாலை திட்டம்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

பல்லடம் : பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒன்றிய அரசின் மூலம் புதிய புறவழிசாலை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தப்படும் என்றும் மேலும் கரூர் - கோவை சிந்தாமணி வரை பசுமை சாலை திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தவுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

 பல்லடம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டர் வினீத், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ராஜன், நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் பாலசந்தர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், ஆணையாளர் விநாயகம், பொறியாளர் ஜான்பிரபு, பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், மின் கோட்ட பொறியாளர் ரத்தினகுமார், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் குடிநீர் விநியோகம், சாலை வசதி, புதிய அங்கன்வாடி மையம், பள்ளிக்கு இடவசதி, கழிப்பறை, விளையாட்டு மைதானம், பள்ளிகள் தரம் உயர்த்துதல்,பேருந்து வசதி உள்ளிட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் நகராட்சி நிர்வாகத்திடம் முழுமையாக ஒப்படைக்க பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:

பல்லடம் நகராட்சியில் ரூ.12 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டும் சில பணிகள் நடைபெற்றும் வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு பாராட்டுத்தக்கதாக உள்ளது. பில்லூர் குடிநீரை பொறுத்தவரையில் பல்லடம் நகராட்சி பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பாதியாக தான் தண்ணீர் வருகிறது.

 வரும் வழியில் கோவை மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கூடுதலாக தண்ணீர் எடுப்பதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் குறைவாக தான் வந்து கொண்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு 4 வது குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் வரும் மே மாதத்தில் முடிவடைய உள்ளது. அதன் பின்னர் பல்லடம் உள்ளிட்ட பகுதிக்கு முழுமையான நிர்ணய அளவு குடிநீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பில்லூர் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் ரூ. 80 கோடி மதிப்பில் புதிய குழாய் அமைத்திட மதிப்பீட்டு தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். பல்லடத்தில் மின் மயானம் அமைக்கும் பணிக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்களிடம் நவீன மின் எரிவாயு தகன மேடை திட்டத்தை பற்றி விளக்கி கூறி அவர்களின் சம்மத்துடன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கூடலூர் முதல் நாகை வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்67ல் முன்பு 7 மீட்டராக இருந்த சாலை பின்னர் 11 மீட்டர் சாலையாக நான் நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும், டி.ஆர்.பாலு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சாராகவும் இருந்த காலத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

 பல்லடம், காங்கயம்,வெள்ளகோயில் பகுதியில் திருமணம் உள்ளிட்ட சுபதின நாட்களில் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண மாநில அரசு மூலம் காங்கேயம், வெள்ளகோயில் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மூலமாக பல்லடம் பகுதிக்கு புதிய புறவழிச்சாலை திட்டம் அமைத்தால் தான் போக்குவரத்து பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண முடியும். கரூர் - கோவை சிந்தாமணி வரை பசுமை சாலை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அத்திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும். இத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும், என்றார்.

Related Stories: