அந்தநல்லூர் அருகே வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சி : வாழை உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்தல் போன்ற நோக்கங்களுடன் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் ரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கியது. இந்நிறுவனத்தில் வாழை உற்பத்தியில் ஈடுபடும் 1,200 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் அலகு கொடியாலம் ஊராட்சியில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் மண் புழு உரம் தயாரித்தல், பஞ்சகாவ்யம், மீன் அமினோ அமிலம், பொன்னீம் தயாரித்தல், வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, கார்ப்பரேசனில் தயாரிக்கப்படும் திடக் கழிவு உரத்தில் இருந்து ஊட்டமேற்றிய உரம் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மேலும், வாழைநார் வாழைப்பட்டையில் இருந்து பிரித்தெடுக்கும் பணிகளையும் கலெக்டர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் விற்பனை மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, ரங்கம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 108 அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் மற்றும் இருங்களூரில் ரூ.57.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 768 அடுக்குமாடி குடியிருப்பு பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் கிராமத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் இயற்கை முறையில் குறுவை பருவத்தில் 5 வகையான பாரம்பரிய நெல் ரகங்ககள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களையும், தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் திருப்பைஞ்ஞீலி, சோழங்கநல்லூர் கிராமங்களில் நுண்நீர் பாசனத்திட்டத்தின் மூலம் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி, கோழிகொண்டை, துளுக்க சாமந்தி, விரிச்சி பூ மற்றும் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாகுபடி முறைகள் மற்றும் நிகர லாபம் உள்ளிட்ட விபரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர் இளம்பரிதி, மேற்பார்வைப் பொறியாளர் மாலா, இணை இயக்குனர் (வேளாண்மை) முருகேசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா, கலெக்டர் பிஏ (வேளாண்மை) மல்லிகா, வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் செயல் அலுவலர் திருமுருகன், அந்தநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், கொடியாலம் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரசேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: