திருப்பத்தூர் அரசு ஆண்கள் பள்ளி வகுப்பறைக்குள் 3 பாம்புகள் புகுந்தது-மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் அரசு ஆண்கள் பள்ளி வகுப்பறைக்குள் 3 பாம்புகள் புகுந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களாக பெய்து வந்த கனமழையால்  பள்ளி வளாகம் சுற்றிலும் முட்புதர்கள் அதிகளவில் சூழ்ந்து காணப்படுகிறது. தற்போது இந்த முட்புதர் பகுதியில் இருந்து ஏராளமான பாம்புகள் இனப்பெருக்கம் செய்து வெளியே வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். அப்போது 3 பாம்புகள் சகசரவென வகுப்பறை அருகே வந்தது. இதனை பார்த்த மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வகுப்பறையில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனை அறிந்த தலைமையாசிரியர் அக்கிலு ரகுமான் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி இரண்டு  பாம்புகளை லாவகமாக பிடித்தனர். ஒரு பாம்பு மட்டும் தப்பி புதருக்குள் சென்று மறைந்தது. அந்த பாம்பை பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினர் திரும்பிச் சென்றனர்.

மேலும், தீயணைப்பு துறை வீரர்கள், பாம்பை கண்டவுடன் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் வெளியே சுற்றும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தப்பி ஓடிய பாம்பை கண்டால் மீண்டும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி சென்றனர்.

Related Stories: