நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

டெல்லி:  நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசும், மக்களும் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும் தமிழ்நாடு அரசு போராடி வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதனிடையே அதிமுக ஆட்சியில் நீட் தேர்வினை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது.

தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதி உத்தரவிட்டார்.  இந்த நிலையில் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசரணையின் போது, நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் விசரணையை ஒத்திவைக்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு கோரியது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: