வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கைவரிசை கொள்ளையடித்த நகைகளை உருக்கி விற்ற 4 பேர் கும்பல் கைது

வாலாஜா : வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு திருடிய நகைகளை உருக்கி விற்றதாக வங்கி நகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேர் கும்பல் சிக்கியது. அவர்களிடமிருந்து ஐந்தரை சவரன் நகை பறிமுதல் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சிண்டிகேட், அனந்தலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் ெதாடர் நகை கொள்ளை நடந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வாலாஜா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை வாலாஜா டோல்கேட் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் நிற்கவில்லை. அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தை சேர்ந்த காட்வின் மோசஸ்(40), திவாகர்(28) என தெரியவந்தது. நண்பர்களான இவர்களில் காடிஸ்மோசஸ் பல ஆண்டுகளாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகல் நேரங்களில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். இதனால் 40 திருட்டு வழக்குகளில் சிக்கியுள்ள இவர், 15 முறைக்கு மேல் சிறைக்கு சென்றும், 3 முறை குண்டர் சட்டத்தில் கைதானவர் என தெரியவந்தது. அவரது நண்பரான திவாகர் திருடிய நகைகளை விற்பனை செய்ய உதவி செய்பவர் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம்:

காட்வின்மோசஸ் அடிக்கடி வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நகைகளை தனது நண்பர் திவாகரிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளை திவாகர் தனது மற்றொரு நண்பரான வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் சதீஷ்(38) என்பவரிடம் கொடுப்பாராம். அந்த நகைகளை சதீஷ் தனது வீட்டில் உள்ள நகைப்பட்டறையில் தங்க கட்டியாக உருக்கி அதனை வாணியம்பாடியில் வசிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷத்(24) என்பவரிடம் கொடுப்பார்.

ஹர்ஷத் வாணியம்பாடியில் நகைக்கடை வைத்திருக்கும் தனது மாமா தத்தாத்ரியிடம் நகைகளை விற்பனை செய்து பணம் வாங்கிக்கொள்வார். நகை விற்ற பணத்தில் பாதியை ஹர்ஷத் எடுத்துக்கொண்டு மீதியை நகை மதிப்பீட்டாளர் சதீஷிடம் கொடுப்பாராம். அந்த பணத்தில் சதீஷ், திவாகர் ஆகியோர் தங்களது கமிஷனை எடுத்துக்கொண்டு கடைசியாக காட்வின் மோசஸிடம் கொடுத்து வந்துள்ளனர். 90 சவரன் நகைகளை உருக்கி கொள்ளையடித்ததும் பல ஆண்டுகளாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து காட்வின்மோசஸ், திவாகர், வங்கி நகை மதிப்பீட்டாளர் சதீஷ், ஹர்ஷத் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஐந்தரை சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மகாசக்தி உத்தரவுப்படி காடிஸ்மோசஸ் உள்பட 4 பேரையும் 15 நாள் காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: