இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில்:

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்திருக்கும் அறிக்கை ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழிக்கு பதிலாகஇந்தி மொழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வா? இந்திய ஒன்றியத்தை துண்டாட துடிப்பதா? என்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி 115-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: