தமிழகத்தில் டெட் தேர்வை 4 லட்சம் பேர் எழுதுகின்றனர்: அதிகாரிகள் தகவல்

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) நாளை தொடங்குகிறது. 20ம் தேதி வரை நடக்கும் இந்த தேர்வில் 4 லட்சம் பேர் எழுத உள்ளனர். ஒன்றிய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவோர், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்  தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்பேரில் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேர் மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்தனர். செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தாள் ஒன்றுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி,  ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரு வேளைகளில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த தேர்வுகள் கணினி வழியில் நடக்கும்.  இதையடுத்து ஹால்டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் முதல் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

Related Stories: