பென்னகர் ஊராட்சியில் திடீர் ஆய்வு தூய்மையற்ற முறையில் அங்கன்வாடி மையம்-ஆசிரியரை கண்டித்த ஆட்சியர்

மேல்மலையனூர் : மருத்துவம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி  மையத்தை தூய்மையற்ற முறையில் வைத்திருந்த  ஆசிரியரை ஆட்சியர் மோகன் கண்டித்தார்.

விழுப்புரம் மாவட்டம் பென்னகர்  கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும்  பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம்  ஊதிய விவரங்கள் குறித்தும் பென்னகர் ஊராட்சியில்  மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் மற்றும்  பொதுமக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பென்னகர்  பஞ்சாயத்துக்குட்பட்ட மருத்துவம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி  மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொருட்களை பாதுகாப்பற்ற முறையிலும், மையத்தை தூய்மையற்ற முறையிலும் வைத்திருந்த  அங்கன்வாடி மைய ஆசிரியரை கண்டித்தார். மேலும் ஊராட்சி மன்ற தலைவரிடம் அங்கன்வாடி மையத்தை சரி செய்து வண்ணம் பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மேல்களவாய் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். மேலும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து பரிசோதித்தார்.

ஆய்வின்போது  செஞ்சி வட்டாட்சியர் நெகருன்னிசா, வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சிவகாமி, புருஷோத்தமன், குழந்தைகள் ஊட்டச்சத்து மைய அலுவலர் சவுமியா, பென்னகர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதவதி பாபு, மேல்களவாய் ஊராட்சி மன்ற  தலைவர் கலைசெல்வி பாலசந்தர், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: