தமிழகத்தில் நடப்பாண்டில் பி.இ., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: நாளை 3ம் கட்ட கலந்தாய்வு; அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு அதிகரித்துள்ளது. அண்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த ஆண்டு ஒரு இடம் கூட காலியாக இருக்காது. மேலும், 3ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்கும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நநிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில், 2 கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் 2வது கட்ட கலந்தாய்வில் 31,095 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 23,458 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரி மற்றும் கோர்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். வரும் 13ம் தேதி 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

இன்னும் 1.10 லட்சம் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டி இருக்கிறது. கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், எலக்ட்ரானிக் படைப்பிரிவில் மாணவர்கள் அதிகளவில் சேருகின்றனர். மைனிங், மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளில் தற்போது குறைந்தளவில் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். 3வது சுற்று கலந்தாய்வு முடிவில் இந்த படிப்புகளில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வை எதிர்ப்பது போன்று பி.ஆர்க் சேர்க்கைக்கான ஜே.இ.இ மற்றும் நாடா (தேசிய கட்டிடவியல் திறனறி தேர்வு) தேர்வை மாநில அரசு எதிர்க்குமா என கேட்கிறீர்கள். நேற்று தமிழகம் வந்த ஒன்றிய அமைச்சர் ஒருவர், கலை அறிவியல் கல்லூரிக்கும் நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். மற்றொருபுறம் ஒன்றிய அரசு ஒரே மாதிரியான உணவு, ஒரே மாதிரியான தேர்வுமுறை, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தியை பிற மாநிலங்கள் மீது திணிக்க பார்க்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடம் மொத்தம் 2,050 பணியிடங்கள் உள்ளன. 493 காலியிடங்கள் உள்ளன, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் 7 ஆண்டு காலம் பணியாற்றி இருந்தால் நேர்முக தேர்வில் 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: