ஊட்டியில் விடுமுறையில் களைகட்டிய சுற்றுலா தலம்

ஊட்டி : விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் வெளியூர் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 2வது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் வாரம் வரை கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

அதன் பின்னர், மழை குறைந்த நிலையில் கணிசமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. கடந்த வாரம் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இதேபோல், படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்திருந்தனர். அதிக சுற்றுலா பயணிகள் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மேகமூட்டத்துடன் குளிரான காலநிலை நிலவியதால் குளு குளு காலநிலையை அனுபவித்தபடியே படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல், தொட்டபெட்டா மலைசிகரம், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.

Related Stories: