சத்தியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.32.82 கோடியில் புதிய குடிநீர் திட்டம்-நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வழங்க நடவடிக்கை

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.32.82  கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணி துவங்கப்பட்டுள்ளது. தனிநபர்  ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் நகராட்சியானது பவானி ஆற்றின் கரையில்  அமைந்துள்ளது. இந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. நகராட்சியில் 29.24 சதுர கிமீ பரப்பளவில் விவசாய விளை நிலங்களை  உள்ளடக்கிய கிராம பகுதிகளாக அமைந்துள்ளது.

 நகராட்சியில் வசிக்கும்  மக்களுக்கு அன்றாட அவசிய தேவையான குடிநீர் வழங்குவதற்காக நகராட்சி  நிர்வாகம் சார்பில் 1966ம் ஆண்டு ரங்க சமுத்திரம் பகுதியில் தலைமை நீரேற்று  நிலையம் அமைக்கப்பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு செய்து நகர் பகுதியில் உள்ள  பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.  நாளடைவில்  சத்தியமங்கலம் நகர் பகுதியில் மக்கள் தொகை பெருகியதோடு நகராட்சியில் உள்ள  குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த 1996ம் ஆண்டு  கோம்புபள்ளம் பகுதியில் பவானி ஆற்றங்கரையில் தலைமை குடிநீரேற்று நிலையம்  அமைக்கப்பட்டு அங்கிருந்து மேல்நிலைத் தொட்டிகளின் மூலம் நகர்ப்பகுதியில்  பெரும்பாலான இடங்களுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகம்  செய்யப்பட்டதோடு, வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது.  

இந்நிலையில், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் நகராட்சியின்  மக்கள் தொகை 37 ஆயிரத்து 816 ஆக உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட 2  குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்ட போதிலும் குடிநீர்  திட்டம் ஏற்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பைப்லைன்கள் ஆங்காங்கே  பழுது ஏற்பட்டு, அவ்வப்போது குடிநீர் விநியோகம் பாதித்தது. மேலும், இது  தவிர புளியங்கோம்பை, பெரியகுளம், தனவாசி காலனி, நாடார் காலனி, ஆண்டவர்  நகர், காசிக்காடு, குள்ளங்கரடு பகுதிகளுக்கு ஆற்று குடிநீர் குழாய்  நீட்டிப்பு செய்ய இயலாமல் அப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர்  விநியோகிக்கப்பட்டு வந்தது.

 பெருகி வரும் மக்கள் தொகை மற்றும்  குடியிருப்புகளால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய பழைய  குடிநீர் திட்டங்களால் இயலாத நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு புதிய  குடிநீர் திட்டம் அமைத்து அனைத்து மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய  அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நகராட்சி தரப்பில் கருத்துரு  அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் நகராட்சி தலைவர்  ஜானகி ராமசாமி மேற்கொண்ட முயற்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்  சத்தியமங்கலம் நகராட்சியில் புதிதாக குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி  ரூ.32.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை டெண்டர் விடுவதற்கான  நடவடிக்கைகள் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி கூறியதாவது: சத்தியமங்கலம்  நகராட்சியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல ஆண்டுக்கு முன்பு  ஏற்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில்  பைப் லைன்கள் ஆங்காங்கே பழுது ஏற்படுவதால் அவ்வப்போது குடிநீர் விநியோகம்  பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும்  சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய குடிநீர்  திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று  அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்  ஒன்றிய, மாநில அரசு மற்றும் நகராட்சி  பங்களிப்புடன் ரூ.32.82 கோடி செலவில் புதிதாக குடிநீர் திட்டம்  செயல்படுத்த நிதி ஒதுக்கீடு மற்றும் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள பழைய எட்டு ராட்சத மின் மோட்டார்களுக்கு  பதிலாக புதிதாக 12 மின் மோட்டார்கள் பொருத்தப்படுவதோடு, 14.3 கிமீ  நீளத்திற்கு பிரதான குழாய்கள், 77.5 கிமீ நீளத்திற்கு புதிதாக  பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. மேலும் புளியங்கோம்பை மற்றும்  பெரியகுளம் பகுதிகளில் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2  மேல்நிலைத் தொட்டிகளும், தனவாசி காலனி, ஆண்டவர் நகர் பகுதிகளில் ஒரு லட்சம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளும் என 4  மேல்நிலை தொட்டிகள் புதிதாக கட்டப்பட உள்ளது.

இப்பணிக்கு டெண்டர் விடும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு  பணிகள் தொடங்கப்படும். இத்திட்டத்தில் நகராட்சியில் கூடுதலாக 8,089  வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். இதன்மூலம்,  தற்போது உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 41,163 பேருக்கு நாளொன்றுக்கு ஒரு  நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம்  நகராட்சி முழுவதும் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படும் என்பதால்  குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: