உணவு மற்றும் குடிநீரின்றி தனுஷ்கோடி மணல் திட்டில் 2 நாளாக தவித்த குடும்பம் மீட்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் இறக்கி விடப்பட்டு 2 நாட்களாக தவித்த குடும்பத்தினர் 5 பேரை மரைன் போலீசார் மீட்டனர். இலங்கை, தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் வந்த ஐந்து இலங்கை தமிழர்கள், தனுஷ்கோடி கடலில் உள்ள நான்காம் மணல் திட்டில் தவித்துள்ளனர். தகவலறிந்து மரைன் போலீசார் நாட்டுப்படகில் சென்று அவர்களை மீட்டு வந்தனர்.  விசாரணையில் இலங்கை மன்னார் தாழ்வுகாடு பகுதியை சேர்ந்த சபரி கூறுகையில், நான் எனது மனைவி ராதிகா, 7 வயது மகன், 3 வயது மகள் மற்றும் 6 மாத குழந்தை என ஐந்து பேர் படகில் வந்தோம்.

எங்களுடன் மற்றொருவரும் வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டோம்.  படகோட்டிகள் எங்களை மணல் திட்டில் இறக்கி விட்டு சென்று விட்டனர். இரண்டு நாட்களாக தண்ணீர், உணவு இல்லாமல் தவித்தோம். அன்று இரவு அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர்  எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் மணலில் படுத்து தப்பித்தோம். எங்களுடன் மணல் திட்டில் இருந்த நபர் கடலில் குதித்து நீந்தினார். அவர் என்ன ஆனார் என்று தெரியவி்லலை.  என்றார். இரண்டு நாட்கள் தவித்ததாக சபரி தெரிவித்த நிலையில் இதன் உண்மை தன்மை குறித்து மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: