பதிவுத்துறையில் 26 சார்பதிவாளர்களை, உதவியாளர்களாக பதவியிறக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவு

சென்னை: பதிவுத்துறையில் 26 சார்பதிவாளர்களை, உதவியாளர்களாக பதவியிறக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற ஆணையின்படி பதிவுத்துறையில் இட ஒதுக்கீடு மற்றும் முதுநிலை அடிப்படையில் புதிய சார்பதிவாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாண்பமை உச்சநீதிமன்ற வழக்குகள் சிவில் அப்பீல் எண் 9334 of 2018 மற்றும் பலவற்றில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணை நாள் 11.09.2018-ன் அடிப்படையில், 1997-98-ஆம் ஆண்டு முதலான 2ம் நிலை சார்பதிவாளர் பட்டியல்களை இட ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி திருத்தம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், 1997-98 ஆண்டு முதலான 2ம் நிலை சார்பதிவாளர் பட்டியல்களை இட ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி திருத்தம் செய்திட பதிவுத்துறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 26.02.2021 அன்று பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

இதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 1997-98 ஆண்டு முதலான 2ம் நிலை சார்பதிவாளர் பட்டியல்களை இட ஒதுக்கீடு விதியை சரிவர பின்பற்றி திருத்தம் செய்து, அதனை செயல்படுத்தி, 30.09.2022க்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திட ஆணையிடப்பட்டது. ஏற்கெனவே 26.02.2021 அன்று அளிக்கப்பட்ட பதவி உயர்வானது விதிமுறைகளின்படி வழங்கப்படாதது தெரிய வந்ததால் அவற்றை இரத்து செய்து உத்திரவிடப்பட்டு, உரிய விதிகளைப் பின்பற்றி 1997-98 ஆண்டு முதல் 2016-17 ஆண்டு வரையிலான 2ம் நிலை சார்பதிவாளர் பட்டியல்கள் திருத்தம் செய்யும் நடவடிக்கைகள் மாண்பமை நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட கால வரையறைக்குள் செய்யப்பட வேண்டும் என்பதால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதன் அடிப்படையில் கடந்த 25.09.2022 அன்று 2017-18 முதல் 2022-23 ஆண்டு வரையிலான 2ம் நிலை சார்பதிவாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு, 29.09.2022 அன்று 85 உதவியாளர்களுக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி 2ம் நிலை சார்பதிவாளர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இட ஒதுக்கீடு மற்றும் முதுநிலை நிர்ணயம் தொடர்பான நீதிமன்ற உத்திரவுகளின்படி முதுநிலை பட்டியல்களில் மாற்றங்கள் செய்ததன் தொடர்ச்சியாக 26 இரண்டாம் நிலை சார்பதிவாளர்களை உதவியாளர்களாக பதவியிறக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 2005-06ம் ஆண்டு முதல் நாளது வரையிலான முதல் நிலை சார்பதிவாளர் பட்டியலை திருத்தம் செய்திட பதிவுத்துறையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: