எருமை மீது மோதல்: ‘வந்தே பாரத்’ காயம்

புதுடெல்லி: குஜராத்தில் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் புகுந்த எருமைகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது. மும்பை சென்ட்ரல் - குஜராத் காந்தி நகர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், குஜராத்தில் நேற்று காலை 11.20 மணியளவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்த போது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக புகுந்தன.  இதனால், அவற்றின் மீது ரயில் மோதியது. இதில், ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது.

இது குறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘மும்பை-காந்தி நகர் வழித்தடத்தில் திடீரென மூன்று, நான்கு எருமைகள் வந்ததால் ரயில் விபத்தில் சிக்கியது. இதில் லேசான சேதம் அடைந்தது. உயிரிழந்த கால்நடைகள் அப்புறப்படுத்தப்பட்ட பின் சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது,” என்றார். பழைய ரயில்களை போல் இல்லாமல், வந்தே பாரத் ரயிலின் முகப்பு பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே, முகப்பு மட்டும் சேதமானது. உட்புற இன்ஜின் பாகங்கள் எதுவும் சேதமாகவில்லை. 

Related Stories: