நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பந்தகால் நாட்டு விழா

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பந்தகால் நாட்டு விழா இன்று காலையில் நடந்தது. வரலாற்று பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண பந்தகால் நடும் வைபவம் இன்று காலையில் அம்மன் சன்னதி முன்பகுதியில் நடந்தது.

இதைத்தொடர்ந்து கோயிலில் பந்தல் அமைத்தல், மின்விளக்கு அலங்காரம், அழைப்பிதழ் அச்சிடுதல் உள்ளிட்ட வேலைகள் துவங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 12ம் தேதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

தொடர்ந்து விழா 11 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 9ம் திருவிழாவான அக். 22ம் தேதி கம்பை நதி காமாட்சி அம்பன் கோயில் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நண்பகல் 12 மணிக்கு நடக்கிறது.

இதைத்தொடர்ந்து 23ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மூன்று நாட்கள் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Related Stories: