முழு உடல் கவசம் அணிந்து நேரில் சென்று, கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுக்கள் : ஆளுநர் பேச்சு

சென்னை : கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டுக்களை தெரிவித்தார்.கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். வணக்கம் எனவும் தமிழ் இனிமையான மொழி எனவும் கூறி உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அப்போது அவர் ஸ்டாலினை பாராட்டி பேசியதாவது,.  ‘கோவிட் பெருந்தொற்றிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் பல்வேறு வகையிலும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும்  நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்துவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முழு உடல் கவசம் அணிந்து கொரோனா சிகிச்சைப் பிரிவிற்கே நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார்கள். கூடுதல் மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவிட் பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் அயராமலும் தன்னலம் கருதாமலும் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,’என்றார். மேலும் ஆளுநர் பேசியதாவது, ‘ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் கணிசமாக உயர்த்தப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்த ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் தேவையையும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த அரசு நிறைவு செய்துள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு பெறப்படும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தி, ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கருப்புப் பூஞ்சை தாக்கம் உள்ளிட்ட கோவிட் நோய்க்கான அனைத்து சிகிச்சைகளையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த சூழ்நிலை அறவே மாறி, தற்போது, தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,’என்றார். …

The post முழு உடல் கவசம் அணிந்து நேரில் சென்று, கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுக்கள் : ஆளுநர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: