செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு; அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்தது: வேறுவார்டுக்கு நோயாளிகள் மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்  மேற்கூரை விரிசல் வழியாக மழைநீர் புகுந்து வார்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இரவோடு இரவாக நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர், உத்திரமேரூர், வந்தவாசி, செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதுபோல் உள்நோயாளிகளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது செங்கல்பட்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மேற்கூரையில் ஏற்பட்ட விரிசல் வழியாக மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் முழங்கால் அளவுக்கு வார்டில் தண்ணீர் தேங்கிநின்றது.

இதனால் படுக்கையில் இருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். செய்வதறியாது  உடமைகளுடன் வெளியில் வந்தனர். இதனால் சிறிது நேரம் அவசர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகிகள்  சம்பந்தப்பட்ட வார்டுக்கு வந்து, நோயாளிகளை வேறு வார்டுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: