நாசரேத் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் மேற்கூரை அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நாசரேத்: நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை- திருச்செந்தூர் இடையே மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  நெல்லை- திருச்செந்தூர், திருச்செந்தூர் - நெல்லை இடையே சிறப்பு விரைவு  ரயில்கள், திருச்செந்தூர்- சென்னை இடையே  செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு இடையே  சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.

நெல்லை-  திருச்செந்தூர் இடையே உள்ள முக்கிய நகரமான நாசரேத்தில் பள்ளி,  கல்லூரிகள் அதிகம் உள்ளதால் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில் பயணத்தையே நாடுகின்றனர். இங்குள்ள ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் மேற்கூரை அமைக்கப்படாததால் பயணிகள் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து  தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளரும், நாசரேத் பேரூராட்சி  3வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ்குமார், ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக  இளைஞரணி அமைப்பாளர் எபனேசர் ஆகியோர் கூறுகையில், நாசரேத் ரயில்  நிலையத்தில் அடிக்கடி ரயில்கள் சந்திப்பு ஏற்படுவதால் 2வது நடை மேடையில்  ரயில் வந்து செல்கிறது. மின்மயமாக்கல் பணிகள் காரணமாக 2வது நடைமேடை பகுதியில்  உள்ள மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் மேற்கூரை இல்லாததால்  வெயிலில் காத்திருக்கின்ற அவலநிலை ஏற்படுகிறது.

மேலும் 2வது  நடைமேடை தாழ்வாக அமைந்துள்ளதால் வயதானோர் ரயிலில் ஏற, இறங்க முடியாமல்  மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே  அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் ரயில் நிலையத்தின் 2வது  நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும். நடைமேடையை உயர்த்த வேண்டும், என்றார். இதே கோரிக்கையை இப்பகுதி மக்கள், பயணிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அரசு  ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: