தொடர் விடுமுறையையொட்டி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: வனத்துறையினர் கண்காணிப்பு

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு, தொடர் விடுமுறையையொட்டி, சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். கடந்த மாதம் துவக்கம் வரை அடிக்கடி பெய்த பருவமழையால், அவ்வப்போது  வெள்ளப்பெருக்கால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்,  தண்ணீரின் அளவு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பள்ளி காலாண்டு விடுமுறையால், கடந்த சில நாட்களாக கவியருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமானது. அதிலும், வெளியூர்களில் இருந்தும் கவியருவிக்கு பயணிகள் வருகை அதிகமாக இருந்துள்ளது.  கவியருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். அண்மையில் பெய்த மழைக்கு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், கூட்டம் அதிகளவில் இருந்ததால் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் பலர், அருகே குளம்போல் தேங்கிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை மற்றும் நேற்று விஜயதசமி என கடந்த இரண்டு  நாட்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. 2 நாட்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதன் மூலம் வனத்துறைக்கு சுமார் ரூ.2 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், நவமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் விதிமீறி வனத்திற்குள் செல்கின்றார்களா? என்று வனக்குழுவினர்  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: