அதிமுக ஆட்சியில் ‘எல்லாமே அரைகுறை’; வாரச்சந்தை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வருமா? தேவதானப்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி: கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பெண்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வாரச்சந்தை கட்டுமான பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். தேவதானப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் வாரச்சந்தை கடைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, மஞ்சளாறு அணை கிராமம், கோட்டார்பட்டி, ராமபுரம், செங்குளத்துப்பட்டி, எழுவனம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, தர்மலிங்கபுரம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, வேல்நகர், சில்வார்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட 25கும் மேற்பட்ட உட்கடை கிராமங்களில் இருந்து தேவதானப்பட்டி புதன்கிழமை வாரச்சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க இந்த சந்தைக்கு வருகின்றனர்.

இந்த பகுதியில் தேவதானப்பட்டி புதன்கிழமை வாரச்சந்தை கிராமப்புற மக்களுக்கு முக்கிய சந்தையாகும். மேலும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் விளைபொருட்களை வாரச்சந்தைக்கு கொண்டுவர முக்கிய சந்தையாக விளங்குகிறது. இந்த வாரச்சந்தையில் சந்தையில் அனைத்துவகையான காய்கறிகள், மளிகை கடைகள், பழக்கடைகள் இயங்கி வருகிறது. தேவதானப்பட்டி வாரச்சந்தைக்கு கொடைக்கானல் பகுதியில் இருந்து காய்கறிகளும், தேனி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மளிகை பொருட்களையும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். இந்த வாரச்சந்தை தற்காலிக மேற்கூரை அமைத்து செயல்பட்டு வந்தது. வாரச்சந்தை நடக்கும் நாட்களில் மழை பெய்தால் வாரச்சந்தை தடைபட்டு வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நிரந்தர கட்டிடத்தில் வாரச்சந்தை இயங்க, கடந்த அதிமுக ஆட்சியில் 2018-2019ம் ஆண்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 110 கடைகள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. அப்போது வாரச்சந்தை கடைகள் கட்டுப்பட்டு 90 சதவிகித பணிகள் நடைபெற்று அப்படியே கிடப்பில் போடப்பட்டது. சாலை அமைத்தல், வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது பேரூராட்சி வளாகத்தில் தற்காலி செட் அமைத்து வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. தற்காலிக வாரச்சந்தையால் வியாபாரிகளுக்கும், சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் அரைகுறை பணிகள் நடந்து வாரச்சந்தை கட்டிட பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து உடனடியாக வாரச்சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆட்சியில் ‘ஆமைவேக பணிகள்’

இதுகுறித்து வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நிரந்தர வாரச்சந்தை கட்டிடம் கட்ட ஆரம்பித்தனர். ஆனால் அந்த கட்டிட பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி வளாகத்தில் போதிய இடம் இருந்தும், நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டும், நிரந்தர வாரச்சந்தை கட்டிட பணி தொய்வு ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனால் அருகில் உள்ள இடத்தில் தற்காலிக வாரச்சந்தை கூடுகிறது. தற்காலிக வாரச்சந்தையில் போதிய இட வசதி இல்லை.

மேலும் மழை பெய்யும் போது வாரச்சந்தை வரும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் 90 சதவிகித பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 10 சதவிகித பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தை கட்டிட பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆகையால் தற்போது விரைந்து வாரச்சந்தை கட்டிட பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்றனர்.

Related Stories: