கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பயங்கரம்; கூலிப்படை ஏவி கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி: கள்ளக்காதலன் உள்பட 7 பேர் கைது

ஸ்ரீகாளஹஸ்தி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த கரிகசீனேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (38). இவரது மனைவி சினேகா (30). குடும்ப வருமானத்திற்காக ஹரிஷ்குமார் ஐதராபாத்தில் டைல்ஸ் வேலைக்கு சென்றுள்ளார். சமீப காலமாக பணிகள் ஏதும் இல்லாததால் ஹரிஷ்குமார் சொந்த கிராமத்திற்கு திரும்பினார்.

இதற்கிடையில், கணவர் ஐதராபாத்தில் வேலைக்கு சென்ற நேரத்தில் ராமகுப்பம் அடுத்த டேக்குமானுதாண்டா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் சினேகாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஹரிஷ்குமார் கிராமத்திற்கு திரும்பியதால் சினேகாவிற்கும் சதீஷ்குமாருக்கும் இடையே இருந்த கள்ளக்காதலுக்கு தடையாக மாறியது. அதனால் சினேகாவும் சதீஷ்குமாரும் ஹரிஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து, சதீஷ்குமார் தனது நண்பர்களான வீரன்னமாலத்தாண்டா, டேக்குமானதாண்டா பகுதியை சேர்ந்த அனில்குமார், ஸ்ரீதர்நாயக், சரண்குமார், பாலாஜி ஆகியோருக்கு ரூ.5 லட்சம் கொடுத்து ஹரிஷ்குமாரை கொலை செய்யுமாறு கூறி முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார்.

அதன்படி கடந்த 25ம் தேதி தங்களது திட்டத்தை நிறைவேற்றும் வகையில், சினேகா, தனது தோழியின் சகோதரரிடம்  பணம் வாங்கி வரும்படி கிருஷ்ணாபுரத்திற்கு ஹரிஷ்குமாரை அனுப்பி வைத்தார். அதன்படி அங்கு சென்றபோது வனப்பகுதியில் மறைந்திருந்த சதீஷ்குமார் உள்பட 5 பேர் கும்பல், ஹரிஷ்குமாரை கழுத்தறுத்து கொலை செய்து அருகில் இருந்த முட்புதரில் சடலத்தை வீசிவிட்டு சென்றனர்.

இதற்கிடையில் சினேகா கடந்த 28ம்தேதி, பணத்தை வாங்கி வர சென்ற தனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தாருங்கள் என குப்பம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் விசாரித்தனர். இதில், கூலிப்படையை ஏவி சினேகாவும், சதீஷ்குமாரும் திட்டமிட்டு ஹரிஷ்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகா அவரது கள்ளக்காதலன் சதீஷ்குமார் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

Related Stories: