கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய சிறுவன் சிக்கினான்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பேருந்து கிடைக்காமல் அங்கேயே தூங்கும் பயணிகளிடம் செல்போன்கள், பணம் திருடப்படுவதாக தொடர்ந்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையடுத்து பேருந்து நிலையத்தில்  பொருத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அனைத்து காட்சிகளிலும் ஒரு சிறுவன் பிக்பாக்கெட் அடிப்பதும் அசந்து தூங்கும் பயணிகளிடம் செல்போன் திருடுவதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து ஆய்வாளர் உமாமகேஷ்வரி, உதவி ஆய்வாளர் பூபதி தலைமையில் தனிப்படை போலீசார், பேருந்துநிலையம் முழுவதும் மாறுவேடத்தில்  காண்காணித்து வந்தனர். இன்று அதிகாலையில் தூங்கிகொண்டு இருந்த பயணியிடம் சிறுவன் படுத்து கொண்டு  செல்போன் திருடுவதை பார்த்ததும் அந்த சிறுவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுவன் என்பதும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதுவரை 50க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடியுள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள செல்போன் கடைகளில் குறைந்த விலையில் 2,000 முதல் 3,000 வரை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார். சிறுவனிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: