வடாற்காடு சர்வோதய சங்கத்தில் தீபாவளி கதர், பொருட்கள் விற்பனை இலக்கு ₹8.66 கோடி-கலெக்டர் தகவல்

வேலூர் : வடாற்காடு சர்வோதய சங்கத்தில் காந்தியடிகளின் 154வது பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் மற்றும் கிராம கைத்தொழில் பொருட்கள் விற்பனை நடப்பு ஆண்டு ₹8.66 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.வடாற்காடு சர்வோதய சங்கத்தின் காந்தியின் 154வது பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் கிராம கைத்தொழில் பொருட்கள் விற்பனையை வேலூர் சாரதி மாளிகை சர்வோதய சங்க அங்காடியில் நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்வோதய சங்க செயலாளர் ரவி வரவேற்றார். நிகழ்ச்சியை கைத்தறி ஆடை மற்றும் பொருட்கள் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைக்க எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறும்போது, ‘வடாற்காடு சர்வோதய சங்கம் 2021-22ம் ஆண்டு கதர் உற்பத்தி விற்பனையுடன், கிராம கைத்தொழில் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை ₹486.07 லட்சத்துக்கும் மற்றும் கதர் பட்டு ஜவுளி மொத்த விற்பனை ₹38.32 லட்சத்துக்கும் என மொத்தம் ₹524.39 லட்சம் விற்பனை செய்துள்ளது. 2022-23ம் ஆண்டுக்கு கதர் உற்பத்தி, விற்பனை மற்றும் கிராம கைத்தொழில் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை ₹780.26 லட்சத்துக்கும், கதர் பட்டு ஜவுளி மொத்த விற்பனை ₹86 லட்சத்துக்கும் என மொத்தம் ₹866.26 லட்சத்துக்கும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்கள் வாங்கக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசின் சிறப்பு தள்ளுபடியாக கதர், பட்டு, பாலிவஸ்திரா மற்றும் கம்பளி ரகங்களுக்கு 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி வருகிறோம். அதேபோல் சங்க காதி கிராமோத்யோக் பவனில் கடந்த 44 ஆண்டுகளாக நவராத்திரி சீசனில் பொம்மை கொலு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது’ என்றார்.

அதேபோல் வேலூர் சின்னஅல்லாபுரத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம கைத்தொழில் வாரியம் அங்காடியில் காந்தியடிகளின் 154வது பிறந்த நாள் மற்றும் தீபாவளியை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை துவக்க விழாவுக்கு டிஆர்ஓ ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கதர் கிராம கைத்தொழில் வாரிய உதவி இயக்குனர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மேலாளர் ரவீந்திரன் வரவேற்றார்.

 

விற்பனையை தொடங்கி வைத்து டிஆர்ஓ ராமமூர்த்தி கூறுகையில், ‘தமிழ்நாடு கதர் கிராம கைத்தொழில் வாரியம் சார்பில் 2021-22ம் ஆண்டில் ₹308 லட்சம் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டு ₹350 லட்சத்துக்கு ஆர்டர்கள் பெறப்பட்டு கடந்த மாதம் வரை ₹120 லட்சம் மதிப்பிலான தளவாடங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு தீபாவளி கதர், கைத்தொழில் பொருட்கள் விற்பனை குறியீடாக ₹130.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: