குன்னூர், கோத்தகிரி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

குன்னூர் : குன்னூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் வண்டிச் சோலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்களுக்கான கூட்டம் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பன் சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வண்டிச் சோலை ஊராட்சி தலைவர் மஞ்சுளா சதீஷ் குமார் தலைமை தாங்கினார். குன்னூர் வருவாய் ஆய்வாளர்  லலிதா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வண்டிச் சோலை ஊராட்சிக்குட்பட்ட ஏழு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 இதே போன்று உபதலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சின்ன உபதலை பகுதியில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி சிதம்பரம்  தலைமை வகித்தார். சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஷ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் குன்னூர் தாசில்தார் சிவகுமார் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தோட்டக்கலை துறை, மின்சார்த்துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறை, மருத்துவத்துறையில், வனத்துறை உட்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். எடப்பள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டப்பள்ளி ஊராட்சியின் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொறுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.  

கோத்தகிரி: கோத்தகிரி ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஜக்கனாரை,கொணவக்கரை,தேனாடு,நெடுகுளா,கெங்கரை,கோடநாடு,அரக்கோடு,கடினமாலா,தெங்குமரஹாடா,நடுஹட்டி,குஞ்சப்பனை உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்கள் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜக்கனாரை ஊராட்சி மன்றத்தில் அரவேனு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சுரேஷ் மற்றும் துணை தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். இதில் 47 கிராமங்களை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஜக்கனாரை ஊராட்சி மன்றத்தில் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் இதற்கு மேல் நடைபெற இருக்கும் பணிகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. இக்கூட்டத்தில் ஜக்கனாரை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அளக்கரை, ஜக்கனாரை,மூனுரோடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதை ஏற்ற கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நெடுகுளா ஊராட்சி மன்றத்தில் கேர்க்கம்பை ஆரம்பபள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா சிவா, துணைத்தலைவர் மனோகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவா ஆகியோர் பங்கேற்றனர். இதில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்,வனத்துறை, காவல் துறை,மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற பணிகள் குறித்தும் நடைபெற இருக்கும் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Related Stories: