ஆம்புலன்சுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளால் ‘டிராபிக்’ போலீசாக மாறிய டாக்டர்; நொய்டாவில் நெகிழ்ச்சி

நொய்டா: நொய்டா பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனது பணி நேரம் போக மற்ற நேரத்தில் டிராப்பிக் போலீசை போன்று போக்குவரத்தை சரிசெய்து வருவதால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ெநாய்டா பகுதியை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணா யாதவ் என்பவர், கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ​​கடுமையான போக்கவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றைக் கண்டார். அந்த ஆம்புலன்சில் நோயாளி இருந்ததால், அவர் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த முடிவு செய்தனர்.

ஆனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்றனர். ஆம்புலன்சுக்கும் உரிய நேரத்தில் வழியிடவில்லை. அதனால் கவலையடைந்த கிருஷ்ணா யாதவ், வேறுவழியின்றி தனது வீட்டுக்கு திரும்பினார். அடுத்த நாள் செய்தித்தாளைப் பார்த்த போது, ​ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லத் தவறியதால், குறிப்பிட்ட அந்த நோயாளி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கிருஷ்ணா யாதவ், பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், தனது பணி நேரம் போக மற்ற நேரங்களில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சாலை போக்குவரத்து சிக்னல் இடங்களில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்.

நொய்டா நகரில் தினமும் இரண்டு முறை சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணா யாதவ் கூறுகையில், ‘போலீசாரின் சீருடையை நான் அணியவில்லை என்பதால், சில நேரங்களில் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு செல்கின்றனர். ஆனால் சிலர் என்னுடைய அறிவுரைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இருப்பினும், நொய்டா மக்கள் தற்போது எனது சேவையை அங்கீகரித்துள்ளனர். இந்த சேவையால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

Related Stories: