பள்ளிகொண்டாவில் பிடிபட்ட ஹவாலா பணம் ரூ.14.70 கோடி கருவூலத்தில் இன்று ஒப்படைப்பு; கைதான 4 பேர் சிறையிலடைப்பு ; என்ஐஏ விசாரணை

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடி கூட்ரோடு அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு காரில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் பண்டல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து பண்டல்களை சோதனையிட்ட போது அதில் கட்டுக்கட்டாக ₹2 ஆயிரம், ₹500, ₹100 பணக்கட்டுகள் 30 பண்டல்களாக கட்டப்பட்டிருந்ததும், இவற்றை காரில் இருந்து கேரள பதிவெண் கொண்ட லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எஸ்பி ராஜேஷ்கண்ணன், ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் பணக்கட்டுகளுடன் பிடிபட்ட 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை பிராட்வே பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நிசார் அகமது(33), மதுரை அங்காடி மங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாசிம்அக்ரம்(19), லாரி டிரைவர் மற்றும் கிளீனர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த நாசர்(42), சர்புதீன்(37) என்பதும் தெரியவந்தது. தவிர விசாரணையில் பணத்தை கோவை வரை கொண்டு சென்று வேறொரு வாகனத்தில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி வைத்தால் ₹50 ஆயிரம் தரப்படும் என்று கூறியதன் அடிப்படையிலேயே கொண்டு வந்ததாகவும், பிற விவரங்கள் ஏதும் தெரியாது என்றும் அவர்கள் திரும்ப திரும்ப கூறினர். அவர்களிடம் வேறு தகவலை பெற மாலை வரை முயற்சித்தும் பலனில்லாததால், பணக்கட்டுகள் இயந்திரம் மூலம் எண்ணப்பட்டது.

இதில் மொத்தம் ₹14 கோடியே 70 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பிடிப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் பிடிபட்ட பணமும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பிடிபட்டவர்களிடம் கைப்பற்றப்பட்ட அவர்களது செல்போன் எண்கள் மூலம் அவர்கள் யார், யாருடன் தொடர்பில் இருந்தனர். அவர்களுக்கும் தடை செய்யப்பட்ட பிஎப்ஐ மற்றும் அதன் சார்ந்த இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம். கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்’ என்றனர். இதற்கிடையே  இச்சம்பவம் தொடர்பாக ேதசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தமிழக காவல்துறையிடம் அறிக்கை பெற்று தனியாக விசாரணை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: