71 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியீடு; திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு

சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. அதாவது, மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், துணைச் செயலாளர்கள்உள்பட பல்வேறு பொறுப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. இந்த மனுக்கள் மீது 26, 27ம் தேதிகளில் பரிசீலனை நடந்தது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதாவது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதியழகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த இன்பசேகரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர்  பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்தி மாற்றப்பட்டு, மதுரா செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த வரதராஜன் மாற்றப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக  தளபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சி.ஆர்.ராமச்சந்திரன் மாற்றப்பட்டு தொண்டாமுத்தூர் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியன் மாற்றப்பட்டு அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த பூபதி மாற்றப்பட்டு,  திருத்தணி எம்எல்ஏ சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் அதிமுகவில் கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அதன் பிறகு அமமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்தார். தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: