பேண்டேஜ் உற்பத்தி கழிவுநீர் கலப்பதால் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: ரூ.25 லட்சம் நஷ்டம் என குத்தகைதாரர் வேதனை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கண்மாயில் பேண்டேஜ் உற்பத்தி கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் விஷமாக மாறி ரூ.25 லட்சம் மதிப்புள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. ராஜபாளையம் சத்திரப்பட்டி வாகைகுளத்தில் கண்மாய் உள்ளது. இந்த தண்ணீரை நம்பி சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கண்மாயை ராஜபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் முருகேசன் என்பவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகை எடுத்து, மீன் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளார்.

தற்போது மீன் குஞ்சுகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில், சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் துணி உற்பத்திக்காக பயன்படுத்தக்கூடிய சைஸிங் கழிவு நீர் கண்மாயில் கலப்பதால் தண்ணீர் விஷமாக மாறி மாசடைந்துள்ளது. இதனால் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குத்தகைதாரர் வேதனை தெரிவிக்கிறார்.

விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் பேண்டேஜ் உற்பத்திக்காக பயன்படுத்திய கழிவுநீர் கொடிய விஷமாக மாறி கண்மாயில் கலப்பதால் பயிர்கள் அனைத்தும் கருகி விடுகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தோம். அதிகாரிகள் அலட்சியப் போக்கில் இருப்பதால் விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் தற்போது மீன் ஏலம் எடுத்தவரும் நஷ்டம் அடைந்துள்ளார் என தெரிவித்தனர்.

Related Stories: